சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 2, 2024

சாணக்கியன் 107

 

ண்பர்களின் சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது. நீண்ட காலம் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில் இருவருமே இனிமையை உணர்ந்தார்கள். வயதாக ஆக நட்பின் ஆழம் அதிகமாகிறது, சந்திப்புகளுக்கு இடையேயான நீண்ட இடைவெளிகள் அந்த ஆழத்தைச் சிறிதும் குறைத்து விடுவதில்லை என்பதை இருவருமே உணர்ந்தார்கள்.  

 

உபசரிப்பு, பரஸ்பர விசாரிப்புகள் முடிந்த பின் இந்திரதத் சாணக்கியரிடம் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்ட விதத்தை விவரித்து விட்டுச் சொன்னார். “…. ஆம்பி குமாரன் எவ்வளவோ உத்தமன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு அயோக்கியனைப் பார்ப்பேன் என்று நான் வாழ்நாளில் அன்று வரை நினைக்கவில்லை விஷ்ணு. தரம் கெட்ட யூடெமஸ் ஆம்பி குமாரனை இமயமலைக்கு இணையாக உயர்த்தி விட்டான்…”

 

சாணக்கியர் சொன்னார். “அழிவுகாலம் வரும் போது புத்தி பேதலித்துப் போவதும், மனம் பக்குவம் அடையும் போது திருந்துவதும் எப்போதும் நிகழ்வது தான் இந்திரதத். இருவர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஆனால் புருஷோத்தமனைப் போன்ற ஒரு மாவீரன் இப்படி சூழ்ச்சியில் உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?”

 

“இளவரசன் மலயகேது வரும் வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி முடிசூடப் போகிறான். முடிசூடியவுடன் அவன் செய்யத் துடிக்கும் முதல் காரியம் யூடெமஸைக் கொல்வது தான். அது நாங்கள் தனியாகச் செய்ய முடிந்ததாக இல்லை. அதனால் தான் உங்களிடம் உதவி கேட்டு நான் நேரில் வந்திருக்கிறேன் விஷ்ணு.”

 

சாணக்கியர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் சந்திரகுப்தன் முன்னிலையில் இதைப் பேசுவதே நல்லது இந்திரதத்”

 

சரியெனத் தலையசைத்த இந்திரதத்துக்கு காலம் சக்கரம் போன்றது என்று சொல்வது சரிதானென்று தோன்றியது.  ஒரு காலத்தில் விஷ்ணுகுப்தர் யவனர்களுக்கு எதிராக ஒன்றிணைவது அவசியம் என்று பதறிக் கொண்டு உதவி கேட்டு கேகயம் வந்தது நினைவுக்கு வந்தது. இன்று அதே யவனர்களுக்கு எதிராக அவர் உதவி கேட்டுக் கொண்டு விஷ்ணுகுப்தரிடம் வந்திருக்கிறார். நிலைமை எந்த அளவு தலைகீழாக மாறி விட்டிருக்கிறது!

 

சந்திரகுப்தனின் மாளிகைக்குச் செல்லும் போது இருவரும் மௌனமாகவே இருந்தார்கள். சந்திரகுப்தன் ஆச்சாரியரைக் கண்டவுடன் மிகுந்த மரியாதையுடன் எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கியவன், அப்படியே அவருடைய நண்பரான இந்திரதத்தின் கால்களையும் தொட்டு வணங்கினான். அவனை ஆசிர்வதித்த இந்திரதத் வெற்றிகள் பண்பட்ட மனிதர்களைப் பாதித்து விடுவதில்லை என்று எண்ணிக் கொண்டார்.

 

அவர்களை மரியாதையுடன் ஆசனங்களில் அமர்த்திய சந்திரகுப்தனிடம் சாணக்கியர் சொன்னார். “சந்திரகுப்தா, நாம் கேள்விப்பட்டது உண்மையே. யவனர்களின் சத்ரப்பான யூடெமஸ் சதி செய்து புருஷோத்தமனைக் கொன்று விட்டு ஐநூறு யானைகளை எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அவனைப் பழி வாங்க இவர் நம் உதவி கேட்டு வந்திருக்கிறார்.”

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரை ஆழமாகப் பார்த்தான். பின் அவன் இந்திரதத்திடம் கேட்டான். “நீங்கள் எங்களிடம் எப்படிப்பட்ட உதவியை எதிர்பார்க்கிறீர்கள் கேகய அமைச்சரே?”

 

சந்திரகுப்தனுக்கும் சாணக்கியருக்கும் இடையே பார்வையிலேயே கருத்துப் பரிமாற்றம் நடந்து முடிந்தது போல் தனக்குத் தோன்றுவது பிரமையா அல்லது உண்மை தானா என்று இந்திரதத்துக்குத் தெரியவில்லை. அவர் சந்திரகுப்தனிடம் சொன்னார். ”யூடெமஸை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று இன்றைய இளவரசரும், நாளைய அரசருமான மலயகேது உறுதியாக நினைக்கிறார். இப்போதைய நிலைமையில் எங்களால் தனியாக அது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. அதனால் தான் தங்களின் உதவி நாடி வந்திருக்கிறேன் அரசே”

 

சந்திரகுப்தன் யோசனையுடன் சொன்னான். “இப்போது கேகயம் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி. அப்படி இருக்கையில் நீங்கள் யூதிடெமஸை எதிர்ப்பது உங்களுடைய உட்பூசலாகத் தான் இருக்கும். அதனால் உதவி செய்ய நாங்கள் வருவது, நாங்கள் உங்கள் உள்விவகாரத்தில் தலையிடுவது போல் அல்லவா ஆகிவிடும்?”

 

இந்திரதத் இதை முன்பே எதிர்பார்த்திருந்து மலயகேதுவிடமும் சொல்லி இருந்தார். சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொண்டால் ஒழிய அவன் உதவ முன்வர மாட்டான் என்பதை யூகிக்க பேரறிவு தேவையிருக்கவில்லை. அவர் சொன்னார். “சத்ரப் யூடெமஸ் எங்கள் அரசரைச் சதிசெய்து கொன்ற பிறகும் நாங்கள் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்டே இருப்பது எங்கள் சுயகௌரவத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். அதனால் யவனர்கள் அதிகாரத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு நீங்கள் உதவியாக இருந்து யூடெமஸை ஒழித்துக் கட்டினால் என்றும் உங்கள் நட்பிலேயே இருக்க விரும்புகிறோம்”

 

சந்திரகுப்தன் சாணக்கியரைப் பார்த்து விட்டு இந்திரதத்திடம் சொன்னான். “ஆச்சாரியரிடம் நீங்கள் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நம் இரு பிரதேசங்களுக்குள்ளும் நீண்டதில் மகிழ்ச்சி கேகய அமைச்சரே. நாம் இணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்”

 

இந்திரதத் நிம்மதியடைந்தார். அடுத்து அவரும் சந்திரகுப்தனும் யூடெமஸை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வியூகங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துப் பேசினார்கள். சாணக்கியர் அவர்கள் பேசிக் கொள்வதை மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தாரேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. சாணக்கியர் அதிகம் வாய்திறந்து பேசாதது இந்திரதத்துக்கு வியப்பை அளித்தது.  ஆரம்பத்தில் சாணக்கியருக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையில் பிணக்கு ஏதாவது இருக்கிறதோ என்று கூட அவர் சந்தேகப்பட்டார். ஆனால் நண்பரை மிக நன்றாக அறிந்த அவர், சாணக்கியர் ஒதுங்கி இருந்து தன் மாணவன் எப்படி எல்லாம் யோசிக்கிறான், முடிவெடுக்கிறான் என்பதைக் கண்காணித்து மனதிற்குள் மதிப்பிடுகிறார் என்று பின் புரிந்து கொண்டார். சாணக்கியரின் மதிப்பீடு அவர் முகத்தில் தெரிந்த திருப்தியில் வெளிப்பட்டது.

 

சந்திரகுப்தனின் அறிவுகூர்மை இந்திரதத்தையும் வியக்க வைத்தது. சாதக, பாதகங்களை அவன் மிக ஆழ்ந்து யோசித்து சிறிய விஷயங்களிலும் சிறப்பான முடிவுகள் எடுத்து அவரை அசத்தினான். அதே போல் அவன் கேகயத்திலிருந்து புஷ்கலாவதி வரை விரிந்திருந்த பிராந்தியத்தைக் குறித்தும் தெளிவான அறிவு படைத்தவனாக இருந்ததும் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஆசிரியனுக்குப் பொருத்தமான மாணவன் என்று சந்திரகுப்தனை அவர் மனம் மெச்சியது.

 

முடிவில் சந்திரகுப்தன் சாணக்கியர் பக்கம் திரும்பிக் கேட்டான். “நாங்கள் சிந்தித்ததில் எதாவது விடுபட்டிருக்கிறதா ஆச்சாரியரே?”  

 

சாணக்கியர் கேட்டார். “இப்போது கேகயப்படையில் இருக்கும் யவன வீரர்கள், மற்ற பகுதி வீரர்கள் ஆகியோரை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு எதிராக இயங்காமல், உங்களுக்கு ஒத்துழைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

 

யூடெமஸ் கேகயத்திலிருந்து அவன் ஓட்டி வந்திருந்த யானைப் படையை ரசித்துக் கொண்டிருந்தான். இப்போது தான் சத்ரப் என்ற பதவிக்கு அர்த்தம் இருக்கும் சூழ்நிலையை அவன் உருவாக்கியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தகவல் ஒன்றை அந்த வேளையில் அவனுடைய ஒற்றன் கொண்டு வந்தான். “சத்ரப். தங்களுக்கு எதிராக கேகய அரசன் மலயகேதுவும், சந்திரகுப்தனும் சேர்ந்து படையெடுத்து வரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கேகய அமைச்சர் இந்திரதத் நேரடியாகச் சென்று சந்திரகுப்தனுடன் ஒப்பந்த்ததை உறுதி செய்து வந்திருக்கிறார்”

 

யூடெமஸ் திகைத்தான். புருஷோத்தமனின் மரணத்தில் அவன் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் கூட அவர்கள் அதிகபட்சமாக ஆம்பி குமாரனிடம் புகார் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்று திடமாக நம்பியிருந்த அவனுக்கு அவர்கள் எதிரியுடன் இணையத் தயங்க மாட்டார்கள் என்று தோன்றியிருக்கவில்லை. ஆனால் ஆரம்ப அதிர்ச்சி பின் குறைய ஆரம்பித்தது. கேகயத்தில் அவன் வீரர்களும் இருக்கிறார்கள், மற்ற வீரர்களும் இருக்கிறார்கள். கேகய வீரர்கள் கேகய மன்னனை தங்கள் தலைவனாக நினைத்தாலும் மற்ற வீரர்கள் தங்கள் உண்மையான தலைவன் யூடெமஸுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் கேகயத்தில் பாதிப்படை தான் அவனுக்கு எதிராகக் கிளம்பும்.

 

இன்னொரு விஷயமும் அவனைத் தைரியமூட்டியது.  அவனுக்கு எதிராக அவர்கள் படையெடுத்து வந்தால் ஆம்பி குமாரன் முன்பு போல விலகி இருக்க முடியாது. இன்னொரு சத்ரப்பான அவன் யூடெமஸை ஆதரித்தே ஆக வேண்டும்.  அப்படி ஆதரிக்கா விட்டால் அவன் சத்ரப்பாக இருப்பதற்குப் பொருளில்லை என்றாகி விடும். அவனுடன் ஆம்பி குமாரனும் இணைந்தால் எதிரிகளை வெல்வது பெரிய விஷயமல்ல.

 

யூடெமஸ் உடனடியாக எதிரிகள் தனக்கெதிராகப் போருக்கு ஆயத்தமாவதைத் தெரிவித்து ஆம்பி குமாரனுக்கு ஒரு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். அத்துடன் உடனடியாக அவர்களை எதிர்கொள்ள அவனுடன் இணைந்து கொள்ள வரும்படி ஆம்பி குமாரனுக்குக் கோரிக்கையும் விடுத்து விட்டுச் சற்று நிம்மதி அடைந்தான்.   

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, April 29, 2024

யோகி 47

 

சுகுமாரன் நாத்திகவாதி. மனிதனுக்கு மேலாக, கடவுள் உட்பட எந்த சக்தியும் இருப்பதாக நம்பாதவர். அவர் மனைவியும், மகளும் கடவுளை நம்புவதைக் கூட மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர் சகித்துக் கொள்கிறார். ’அறிவை அடகு வைத்து விட்டவன் அவனாகத் தான் அதை மீட்டு எடுக்க வேண்டும். அப்படி அவன் மீட்டு எடுக்கும் வரை அடுத்தவர்களின் அறிவுரை எதுவும் அவனிடம் எடுபடாது.’ என்பது அவர் அடிக்கடி நினைக்கும் உண்மை. கடவுளையே நம்பாத அவருக்கு ஆவிகள் மீது எப்படி நம்பிக்கை வரும்?

 

ஆனால் கண்களின் முன்னே தோட்டத்தில் நின்று புன்னகைத்த உருவத்தைச் சந்தேகப்படவும் எதுவுமில்லை. இறந்து, அவர் கண் முன்னே பிணமும் எரிக்கப்பட்ட உருவம் நேரில் தெரிவதை ஆவி என்பதைத் தவிர வேறு எந்தப் பெயரில் அழைப்பது? டாமி குரைப்பதற்கு இதைத் தவிர காரணம் வேறு எதுவும் இல்லை என்பதுவும் அவருக்கு உறைத்தது. அவனைக் கூண்டில் இருந்து விடுவிக்கத் தாமதமானது தான் காரணம் என்றால் அவரது கார் வந்தவுடனாவது அவன் குரைப்பதை நிறுத்தியிருக்க வேண்டும்...

 

பயம் அவர் பல காலமாக அறியாத ஒரு உணர்ச்சி. அதே போல் அவர் அதிகமாய் கவலையும் பட்டதில்லை. பணமும், செல்வாக்கும் அதிகமான பிறகு பயத்திற்கும், கவலைக்கும் எந்தக் காரணமும் அவருக்கு இருக்கவில்லை. எந்தப் பிரச்சினையும் அதிக செலவிலாவது தீர்க்கப்பட முடிவது தான். செலவு செய்ததை விடப் பலமடங்கு பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருக்கையில் அதிகமாய் யோசிக்க எதுவுமில்லை. ஆனால் சைத்ராவின் உருவத்தை இத்தனை தத்ரூபமாய் எதிரில் பார்த்தவுடன், தானாக எழுந்த பீதியைக் குறைத்துக் கொள்வது அவருக்குச் சிரமமாகத் தானிருந்தது.

 

துடிப்பதை ஒரு கணம் நிறுத்திய சுகுமாரனின் இதயம் வேகமெடுத்து சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்த போது அவர் கஷ்டப்பட்டு பார்வையைத் திருப்பி கூர்க்காவைப் பார்த்தார். கூர்க்கா கேட்டை சாத்திக் கொண்டிருந்தான். அவன் நின்றிருக்கும் இடத்திலிருந்தும் சைத்ராவின் ஆவியைப் பார்க்காமலிருக்க வழியில்லை. ஆனால் கூர்க்கா எந்த மாற்றமும் இல்லாமலிருந்தான். ஒருவேளை இது என் பார்வைக்கு மட்டும் தான் தெரிகிறதோ?

 

மீண்டும் பார்த்த போது சைத்ராவின் புன்னகை விரிந்தது. மெல்ல அவரை  நெருங்க யத்தனிப்பது போல் தோன்றவே சுகுமாரன் கூடுதலாய் ஒரு கணமும் அங்கே நிற்கப் பிரியப்படவில்லை. மின்னல் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்ட அவர் ஜன்னல் அருகே நின்று கூர்க்காவிடம் கத்தி சொன்னார். “டாமிய கூண்டிலிருந்து வெளிய விட்டுடுப்பா

 

கூர்க்கா தலையசைத்து விட்டு, வீட்டின் பின்பக்கமாகப் போக ஆரம்பித்த போதும் அவன் அந்த  ஆவியைப் பார்த்தது போல் தெரியவில்லை. பார்த்திருந்தால் பயந்து ஓடி வந்திருப்பான். படபடக்கும் இதயத்துடன் சுகுமாரன் தனது அறைக்குப் போய் ஜன்னல் வழியே பார்த்தார். இப்போதும் தோட்டத்தில் அதே இடத்தில் சைத்ரா தெரிந்தாள்.

 

கூண்டில் இருந்து விடுபட்ட டாமியும் ஓடி வந்து, சைத்ரா நிற்கும் இடத்தைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் குரைத்தது. கூர்க்கா காதைக் குடைந்து கொண்டே எரிச்சலுடன் சொன்னான். “சும்மா இரு டாமி. எத்தனை நேரமாய் கத்தறே? கூண்டிலிருந்து தான் அவிழ்த்து விட்டாச்சுல்ல. அப்பறம் என்ன?”

 

அவனைப் பொருட்படுத்தாமல் டாமி குரைத்தது. சைத்ராவின் ஆவி நிற்பது போல் அவர் உணர்ந்தது பிரமையல்ல என்பது சுகுமாரனுக்கு உறுதிப்பட்டது. ’அதை டாமியும் பார்க்கிறான். ஆனால் கூர்க்காவுக்குத் தான் எதுவும் தெரியவில்லை...’

 

சுகுமாரனுக்கு வயிற்றில் எரிச்சல் அதிகமாக ஆரம்பித்தது. காதில் கேட்கும் ரீங்காரமும் அதிகரித்தது. டாமி தொடர்ந்து குரைத்ததைக் கேட்டுக் கொண்டு இருந்ததால் தலைவலிக்கவும் ஆரம்பித்தது. ஜன்னலிலிருந்து நகர்ந்து கட்டிலில் வந்தமர்ந்தார்.

 

ஆவிகள் என்பது நம் பயங்கள் வடிவம் எடுப்பது தான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. ‘அவள் இறந்து எத்தனை நாட்களாகி விட்டன. எரித்தவுடனேயே அவளை மறந்துமாகி விட்டது. கோவிட் சம்பந்தமாக இன்ஸ்பெக்ஷனுக்கு ஒரு அதிகாரி வந்த போது கூட, அவர் பயப்படவில்லையே. அதனால் ஆழ்மனதின் பயம் இப்படி வடிவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சரி அது காட்சி அளித்தால் தான் என்ன? அது வேறென்ன செய்யும்? வீட்டுக்குள்ளும் ஆவி வருமா? வர வழியில்லை. போன மாதம் தான் வீட்டில் பல பூஜைகளை மனைவி செய்வித்தாள். வீட்டுக்கு ஏதோ ரட்சை கட்டியிருப்பதாக, அந்தப் பூஜைகள் செய்த சாமியார் சொல்லி விட்டுப் போனார். ’இப்படியெல்லாம் கதை சொல்லி நல்லா சம்பாதிங்கடாஎன்று அன்று இகழ்ச்சியாகச் சொல்லி மனதிற்குள் சிரித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இப்போதோ இகழ்ச்சியாக நினைக்கத் தோன்றவில்லை. பூஜையறையில் ஹோமங்களின் சாம்பலை மனைவி ஒரு டப்பாவில் எடுத்து வைத்திருந்தது ஞாபகம் வர, எதற்கும் இருக்கட்டும் என்று போய் அதை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு வந்தார்.

 

வெளியில் திடீரென்று டாமி குரைப்பது நின்றது. சுகுமாரன் மெல்ல எழுந்து போய் ஜன்னல் வழியே பார்த்தார். முன்பு காட்சி அளித்த இடத்தில் இப்போது சைத்ராவின் ஆவி தெரியவில்லை.  நிஜமாகவே ஹோமங்களின் சாம்பலுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று தோன்றியது. இப்போது சிறிது வயிற்று எரிச்சலும் குறைந்து, காதில் கேட்கும் ரீங்காரமும் குறைந்தது.

 

சற்று நிம்மதி அடைந்தவராய் கைபேசியில் இணையத்தில் ஆவிகள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்தார். நேரம் போவதே தெரியாமல், அவற்றைப் படிக்கப் படிக்க அவர் தலைசுற்ற ஆரம்பித்தது. ஒரு தளத்தில் சொல்லப்பட்டு இருந்த தகவல்களை இன்னொரு தளம் மறுத்தது. மூன்றாவது தளமோ முற்றிலும் புதிய தகவலைச் சொன்னது. எதிரும் புதிருமான தகவல்களைப் படித்து முடிக்கையில் குழப்பமே மிஞ்சியது. 

 

டாமி குரைப்பதை நிறுத்தி விட்ட பிறகு தான் கூர்க்காவுக்குத் தலைவலி குறைய ஆரம்பித்தது. சனியன் இரவு பத்து மணிக்கு குரைக்க ஆரம்பித்து சற்று முன் தான் நிறுத்தியிருக்கிறது. அவன் கைபேசியில் நேரம் பார்த்தான். பன்னிரண்டே முக்கால். அவன் வழக்கமாய் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே உறங்குவான். இன்றும் அதற்கு அவன் தயாரானான். சிறிது நேரத்தில் அவன் கண்ணயர்ந்தான்.

 

எவ்வளவு நேரம் அவன் உறங்கினானோ தெரியவில்லை. டாமி பழையபடி ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தது. லேசாக அவன் கண்களைத் திறக்கையில் ஏதோ ஒரு பைக் கடந்து சென்றது. சோம்பல் முறித்தவனாக அவன் யாராவது வீட்டு அருகே தெரிகிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது. ஆட்கள் யாராவது நெருங்கி வந்தால் தான் டாமி இப்படிக் குறைக்கும். அல்லது சிலசமயங்களில் எங்கிருந்தாவது பூனை வந்தாலும் டாமி குரைப்பதுண்டு.  கூர்க்கா எரிச்சலுடன் எழுந்து உள்ளே போனான். உள்ளே தோட்டத்தில் ஒரு துணி எரிந்து கொண்டிருந்தது.

 

டாமி குரைக்கும் சத்தம் மறுபடி கேட்க ஆரம்பித்தவுடன் சுகுமாரனும் எழுந்து வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஏதோ ஒன்று தோட்டத்தில் எரிவது அவருக்கும் தெரிந்தது. நல்ல வேளையாக அதை கூர்க்காவும் பார்த்து விட்டு வந்து அவசர அவசரமாக பூட்ஸ் கால்களால் மிதித்து அணைக்க ஆரம்பித்தது தெரிந்தது. அவர் திகைப்புடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.

 

என்னது?” என்று சத்தமாக அவர் கேட்க நினைத்தாலும் அவர் குரல் ஏனோ குளறியது.

 

தலைநிமிர்ந்து அவரைப் பார்த்த கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “எதோ துணி எரிஞ்சுகிட்டிருக்கு. இது எப்படி வந்துச்சுன்னே தெரியல

 

டாமி அந்தத் துணியைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது. சுகுமாரனைப் பார்த்ததும் அவர் அருகே ஓடி வந்து குரைத்து புகார் சொன்னது. அன்புடன் அதைத் தடவிக் கொடுத்தபடி சுகுமார் கூர்க்காவிடம் கேட்டார். ”அது என்ன துணி? எப்படி வந்துச்சு? யார் எரிச்சாங்க?”

 

கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “தெரியலையே சார்.” சொல்லி விட்டு குனிந்து, பாதி எரிந்திருந்த அந்தத் துணியைக் கையில் எடுத்து விரித்தான். அது ஒரு காவித் துணி....

 

அதைப் பார்த்ததும் சுகுமாரனுக்கு குப்பென்று வியர்த்தது.


(தொடரும்)

என்.கணேசன்





 

Thursday, April 25, 2024

சாணக்கியன் 106

 

புருஷோத்தமனின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் போதும் மலயகேதுவின் மனம் கொதித்துக் கொண்டேயிருந்தது. புருஷோத்தமனுக்கு மரியாதை செலுத்த அருகிலிருந்த பகுதிகளின் அரசர்களும், அமைச்சர்களும் வந்து சென்றார்கள். ஆம்பி குமாரனும் தன் பிரதிநிதியை அனுப்பியிருந்தான். யூடெமஸ் கூட இரங்கல் கடிதம் அனுப்பியிருந்தான். அதைப் படிக்கையில் மலயகேது தன் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையாகச் சிரமப்பட்டான்.

 

அவன் இந்திரதத்திடம் சொன்னான். “இவன் பிணத்தைப் பார்க்காமல் என் மனம் ஆறாது அமைச்சரே. நாம் உடனடியாக அவனை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு செல்வதைத் தவிர வேறு கௌரவமான வழி எனக்குத் தெரியவில்லை”

 

இந்திரதத் அமைதியாகச் சொன்னார். ”நான் ஏற்கெனவே சொன்னபடி அதில் சிக்கல் இருக்கிறது இளவரசே. இப்போது நம்மிடம் இருக்கும் படைகளில் நம் வீரர்களின் எண்ணிக்கை பாதி தான். ஒரு பகுதி யவன வீரர்கள். மீதமுள்ளவர்கள் மற்ற பகுதிகளின் வீரர்கள். யாரும் தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் இருக்கவும், எல்லோர் மீதும் கட்டுப்பாட்டை வைத்திருக்கவும் அலெக்ஸாண்டர், தான் கைப்பற்றிய எல்லாப் பகுதிகளிலும் இந்த யுக்தியைத் தான் கையாண்டு இருக்கிறான். யூடெமஸை எதிர்த்துப் போரிட யவன வீரர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள். மற்ற பகுதி வீரர்களும் சத்ரப்பான அவனை எதிர்க்கத் தயக்கமே காட்டுவார்கள். அப்படி இருக்கையில் நம் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் வெற்றி பெறுவது கஷ்டம்.... நான் ஆம்பி குமாரனுக்கு நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி நமக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். சத்ரப்பான அவன் அதைச் செய்யா விட்டால் நீதி வேண்டி வேறு வழியைத் தேடும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறேன்.”

 

மலயகேது சந்தேகத்தோடு கேட்டான். “அவன் நமக்கு உதவுவான் என்று நினைக்கிறீர்களா?”

 

இந்திரதத் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அவன் உதவுவான் என்று தோன்றவில்லை. விசாரிக்கிறேன் என்று சொல்லி யூடெமஸிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் எழுதி தன் பொறுப்பு முடிந்தது என்று சும்மாயிருந்து விடுவான் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

மலயகேது இயலாமை கலந்த கோபத்தோடு சொன்னான். “அதனால் நாமும் சும்மா இருந்து விடலாமென்று சொல்கிறீர்களா அமைச்சரே. அது மட்டும் முடியாது. அப்படி நான் இருந்து விட்டால் ஒரு வீரகுலத்தில் பிறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.”

 

இந்திரதத் மெல்லச் சொன்னார். “இன்னொரு வழி இருக்கிறது. யூடெமஸுக்கு எதிராகப் போரிட நாம் சந்திரகுப்தனின் உதவியைக் கேட்கலாம்.”

 

“அவன் உதவுவானா?”

 

“யவனர்களுக்குப் பதிலாக அவன் தலைமையை நாம் ஏற்றுக் கொண்டால் அவன் உதவும் வாய்ப்பிருக்கிறது.”

 

மலயகேது யோசித்தான். உதவி செய்ய வருபவன் எஜமானாகி விடுவதை ஏற்க அவனுக்குத் தயக்கமாகத் தான் இருந்தது. அதுவும் சிலகாலம் முன்பு வரை தட்சசீல மாணவனாகச் சாதாரணமாக இருந்த ஒருவன் வீரபாரம்பரியம் மிக்க கேகயத்தின் மீது அதிகாரம் செலுத்த முடிந்தவனாக மாறுவது அவனுக்குச் சிறிது நெருடலாகத் தான் இருந்தது.  

 

மலயகேது சொன்னான். “தந்தை இருந்த வரை அவனுடைய புரட்சிப்படையினரை அடக்கி நம்மை அண்ட விடாமல் தூரத்திலேயே வைத்திருந்தார். அவன் தலைமையில் நாம் இயங்குவதை விட நம் தலைமையின்கீழ் அவன் வருவதல்லவா நமக்குப் பெருமை”  

 

“உண்மை தான் இளவரசே. ஆனால் பிலிப்பின் மரணத்திற்குப் பின் நிலைமை மாறி விட்டது. பிலிப்பைக் கொன்று யவனர்களை வாஹிக் பிரதேசத்திலிருந்து துரத்த முடிந்த அவனுக்கு யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட நம் தலைமையை ஏற்கும் அவசியம் இல்லை. பிலிப்பைக் கொன்ற பிறகும் அவனை எதுவும் செய்ய முடியாத நிலைமையில் தான் சத்ரப்களான யூதிடெமஸும், ஆம்பி குமாரனும் இருக்கிறார்கள். அதனால் சந்திரகுப்தன் நம்மைவிடச் சௌகரியமான நிலைமையில் தான் இருக்கிறான்.”

 

மலயகேது தயக்கத்துடன் கேட்டான். ”நமக்கு வேறு வழியில்லையா?”

 

“என் அறிவுக்கெட்டிய வரை இல்லை.”

 

“சந்திரகுப்தன் நமக்கு உதவ முன்வருவானா? அவன் உதவி யூடெமஸை வீழ்த்த நமக்கு உதவுமா?”

 

இந்திரதத் சொன்னார். “அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தர் என் நண்பர். அவரிடம் உதவி கேட்டால் அவர் நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மேலும் அவர்களது அடுத்த இலக்கு மகதம் என்பதால் தனநந்தனை வீழ்த்த சந்திரகுப்தன் தன் படைவலிமையை விரிவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதனால் நமக்கு உதவினால் அவனுக்கும் இலாபம் தான். அவனுடன் இணைவது யூடெமஸை வீழ்த்த நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன் இளவரசே.”

 

மலயகேது நிறைய யோசித்தான். தந்தையை இழந்த பிறகும் யூடெமஸின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை விட அவனை ஒழித்துக் கட்ட உதவமுடிந்த சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொள்வது மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

 

ந்திரகுப்தன் தாயின் வரவுக்குப் பின் பெரும் நிம்மதியை உணர்ந்தான். ஒரு காலத்தில் அவள் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் குறித்து அடிக்கடி கவலைப்பட்டது போல இப்போது அவன் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. வாஹிக் பிரதேசத்தின் நிர்வாக வேலைகளில் அவனால் நிம்மதியாக ஈடுபட முடிந்தது. சாணக்கியர் அதில் எல்லாம் எந்தத் தலையீடும் செய்யாமலிருந்தார். அது மட்டுமல்லாமல் முக்கியப் பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்ற மிகமுக்கிய விஷயங்களில் அவன் அவரைக் கலந்தாலோசிக்க முற்பட்ட போது கூட அதைக் காது கொடுத்து கேட்க அவர் மறுத்து விட்டார். “நீ உன் விருப்பம் போல செய்” என்று ஒதுங்கி விட்டார். ஆரம்பத்தில் அவனுக்கு அவர் அவன் மீது ஏதாவது கோபம் கொண்டு சொல்கிறாரோ என்று கூட பயம் வந்திருக்கிறது.

 

“ஏன் ஆச்சாரியரே இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் காட்டிய வழியில் அல்லவா நான் இத்தனை நாட்களும் பயணித்திருக்கிறேன். இப்போது மட்டும் ஏன் எனக்கு அறிவுரை சொல்ல மறுக்கிறீர்கள்”

 

“முட்டாளுக்கு மட்டுமே தொடர்ந்து அறிவுரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். புத்திசாலிக்குத் தொடர்ந்த அறிவுரைகள் தேவையில்லை. நீயே சரியாக முடிவெடுக்கும்  தகுதியைப் பெற்ற பிறகும் நான் அதில் தலையிடுவது உன் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் நல்லதல்ல சந்திரகுப்தா. எல்லா விஷயங்களிலும் என்னைச் சார்ந்தே நீ இருப்பது ஆசிரியனான எனக்கும் பெருமையல்ல.”

 

“இல்லை ஆச்சாரியரே. நான் தவறாக எதாவது முடிவெடுத்து விட்டால்?’”

 

“அதை உணரும் போது அதை நீயாக மாற்றிக் கொள்வாய். அது தான் சரியாகக் கற்றுத் தெளியும் முறை.  மிகப்பெரிய தவறு எதையாவது நீ செய்யவிருக்கும் பட்சத்தில், அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் பட்சத்தில், நானாகவே கண்டிப்பாக அதைச் சுட்டிக் காட்டுகிறேன். மற்றபடி நீ உன் அறிவு சொல்கிறபடி முடிவுகள் எடுப்பது தான் சரி.”  

 

அதனாலேயே சந்திரகுப்தன் அவர் தலையிடாத விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுத்தான். அவர் போலவே பல விஷயங்களில் சிந்திக்கக் கற்றிருந்த அவன் பெருந்தவறான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. ஓரிரு நியமனங்களில் அவர் சற்று வேறு மாதிரியான முடிவுகள் எடுத்திருப்பார் என்றாலும் கூட அவன் முடிவுகளும் மோசமானவையாக இருக்கவில்லை என்பதால் அவர் தன் கருத்துகளை அவனிடம் சொன்னதில்லை.

அவர் அவன் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டே இருந்தார். படிப்பது, ஆட்களைச் சந்திப்பது, எங்காவது பயணம் செய்வது என்று ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார். சில சமயங்களில் என்ன செய்கிறார், எதற்காகச் செய்கிறார் என்பதை அவனிடம் சொல்வார். சில விஷயங்களைச் சொல்லவே மாட்டார்.  அந்த விவரங்கள் அவனுக்கு அவசியமில்லாதவை என்று அவர் நினைப்பதாக அவனுக்குத் தோன்றும். ’உன் வேலையை நீ செய்; என் வேலையை நான் செய்கிறேன். கண்டிப்பாக இருவரும் தெரிந்திருக்க வேண்டியதை மட்டும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வோம்.’ என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை.

 

அதிலும் சந்திரகுப்தன் பிரமிப்பையே உணர்ந்தான். எதிலும் தனக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று அவர் என்றுமே ஆசைப்பட்டதில்லை. அவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும் அவர் எப்போதும் நினைத்ததில்லை. அவர் நிலைமையில் இருக்கும் எந்த மனிதனாலும் இது சாத்தியப்பட்டிருக்காது என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் அவரை ஒரு முறையாவது அவன் சந்தித்துப் பேசாமல் இல்லை. அவரிடம் சென்று பேசி விட்டு வரும் போதே மனம் தெளிவாவது போல் அவன் உணர்வான்.  

 

இன்றும் அவரைச் சந்திக்கச் செல்லும் முன் காவலனை அழைத்துக் கேட்டான். “ஆச்சாரியர் அவர் அறையில் தான் இருக்கிறாரா, இல்லை வெளியே சென்றிருக்கிறாரா?”

 

காவலன் சொன்னான். “கேகய அமைச்சர் அவரைச் சந்திக்க வந்துள்ளார் அரசே. ஆச்சாரியர் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்”

(தொடரும்)

என்.கணேசன்   

Monday, April 22, 2024

யோகி 46


செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சுகுமாரனின் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு போன இளைஞன், சுகுமாரனின் வீடிருக்கும் தெருக்கோடியில் பொறுமையாகக் காத்திருந்தான். சுகுமாரனின் குடும்பத்தினர் கும்பகோணம் போயிருக்கிறார்கள். பெரிய பங்களாவாக இருந்த அந்த வீட்டில் சுகுமாரன் மட்டுமே இப்போது தனியாக இருக்கிறார். அவரும் சற்று நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார்.  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் சற்று இளைப்பாறி விட்டு மாலை ஐந்து மணியிலிருந்து ஐந்தே கால் மணிக்குள் அவர் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார். இது வழக்கமாய் நடப்பது தான். அவரது வீட்டை, பகலில் ஒரு கூர்க்காவும், இரவில் ஒரு கூர்க்காவும் காவல் காக்கிறார்கள். வீட்டில் டாபர்மேன் நாய் ஒன்று இருக்கிறது. இப்போது அது வீட்டின் பின் பக்கமிருக்கும் கூண்டில் இருக்கிறது. இரவு சுகுமாரன் வந்த பின் தான் அது கூண்டிலிருந்து விடுவிக்கப்படும். மறுநாள் காலை வரை வீட்டைச் சுற்றி உலாவிக் கொண்டு தானிருக்கும். காலையில் மருத்துவமனைக்குப் போவதற்கு முன் தான் சுகுமாரன் அதை கூண்டில் அடைத்து விட்டுப் போவார். அதனால் இரவிலிருந்து காலை வரை அதன் ஆர்ப்பாட்டம் அதிகமாய் இருக்கும். தெருவில் செல்லும் பாதசாரிகள், தெரியாமல் அவர் வீட்டு கேட் பக்கம் நெருங்கி நடந்தால் கூட, அது மிக ஆக்ரோஷமாய் அவர்களை மிரட்டும்...

 

டாக்டர் சுகுமாரனின் கார் வீட்டை விட்டு வெளியேறியதை அந்த இளைஞன் பார்த்தான். அதன் பின் சரியாக ஏழு நிமிடங்கள் கழித்து அந்த இளைஞன் அவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  இருபக்கமும் வேடிக்கை பார்த்தபடி நிதானமாய் நடந்த அவன் அவர் வீட்டருகே வந்த போது திடீரென்று மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்றான். அவன் பார்வை கேட் கம்பிகளின் இடையே தெரிந்த முன்புறத் தோட்டத்தில் லயித்து நின்றது. அதை கூர்க்கா கவனித்தான். வழிப்போக்கர்கள் சிலர் அப்படி அந்த அழகான தோட்டத்தை ரசித்து நின்று பார்த்து விட்டுப் போவது உண்டு என்பதால் அவன் அந்த இளைஞனை சந்தேகப்படவில்லை.

 

சில வினாடிகள் நின்று அந்தத் தோட்டத்தின் மஞ்சள் பூக்களை ரசித்துப் பார்த்த இளைஞன் கூர்க்காவை நெருங்கி சொன்னான். “அந்த மஞ்சள் செடியோட நாத்து ஒன்னெ ஒன்னு தருவீங்களா? பல தடவை நர்சரில இருந்து வாங்கி எங்க வீட்டுல வெச்சி பார்த்துட்டேன். இவ்வளவு நல்லா வர மாட்டேங்குது.”

 

கூர்க்கா சொன்னான். “ஓனர் திட்டுவாரு

 

நான் காசு வேணும்னாலும் தரேன். நர்சரில என்ன ரேட்டோ அதைக் குடுத்துடறேன். ஒரே ஒரு செடி கொஞ்சம் மண்ணோட குடுங்க போதும்.” என்று சொன்னவன் நூறு ரூபாய் தாள் ஒன்றை சட்டைப் பையிலிருந்து எடுத்தான்.

 

கூர்க்கா யோசித்தான். வீட்டில் யாரும் இல்லை. வரிசையாக இருக்கும் பல நாற்றுகளில் ஒரே ஒரு நாற்றை எடுத்துக் கொடுத்தால் யாருக்கும் தெரியப் போவதுமில்லை

 

ந்த இளைஞன் நூறு ரூபாயை நீட்ட கூர்க்கா வாங்கிக் கொண்டான். இளைஞன் தன் கையில் மடித்து வைத்திருந்த ப்ளாஸ்டிக் பையையும், பாலிதீன் கையுறையையும் தந்து சொன்னான். “ஒருத்தர் சொன்னார். இந்தச் செடியை மட்டும் கைபடாமல் மண்ணோட எடுத்துட்டு போய் நட்டால் தான் நல்லா வளரும்னு. அப்படியே உங்க கையும் மண்ணுல படாம எடுத்துக் குடுங்க பார்ப்போம். இந்த தடவையாவது எங்க வீட்டுல வளருதான்னு….”  

 

அந்த இளைஞன் சொன்னது வினோதமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றினாலும், அவன் பணம் தந்திருந்ததால் கூர்க்கா மறுக்கவில்லை. மண்ணைத் தொட்டு, கைகழுவும் அவசியமும் இல்லை என்பதால் அந்தக் கையுறையை மாட்டிக் கொண்டு ப்ளாஸ்டிக் உறையை எடுத்துக் கொண்டு உள்ளே போய் ஓரமாய் இருந்த ஒரு நாற்றை எடுத்து சிறிது மண்ணையும் எடுத்து ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான்.

 

அந்த இளைஞன்தேங்க்ஸ்என்று சொல்லி அந்த ப்ளாஸ்டிக் பையை மிகக் கவனமாக வாங்கிக் கொண்டான்.  பின் தலையசைத்து விட்டு நகர்ந்தான். நடந்தபடி கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். 5.35. பரசுராமன் இந்த மண்ணை சரியாக 6.42க்கு அவர் வீட்டிற்குக் கொண்டு வந்து தரச் சொல்லி இருக்கிறார். தெருக்கோடியில் அவன் நிறுத்தியிருக்கும் பைக்கில் அவர் வீட்டுக்குச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் எப்படியும் தேவைப்படும்

 

தெருக்கோடியில் அந்த நாற்றை வீசி விட்டு மண்ணை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த இளைஞன் பைக்கைக் கிளப்பினான். 

 

ரியாக 6.42க்கு பரசுராமன் வீட்டு வாசலில் அந்த இளைஞன் சுகுமாரன் வீட்டு மண் இருந்த ப்ளாஸ்டிக் உறையுடன் நின்றான். பரசுராமன் கருப்புத் துணியைத் தலையில் கட்டியிருந்தார். கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து முழுமையாக கருப்பு ஆடைகளில் இருந்தார். அவர் அவனிடமிருந்து அந்த ப்ளாஸ்டிக் உறையைத் தன் கையில் வாங்காமல் கீழே அவர் கைகாட்டிய இடத்தில் வைத்துவிடச் சொன்னார். அங்கே ஒரு முக்கோண வடிவம் சிவப்பு  நிறத்தில் வரையப்பட்டிருந்தது. அந்த இளைஞன் அங்கே வைத்து விட்டுப் போய் விட்டான்.

 

பரசுராமன் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஜெபித்தார். பின் கண்களைத் திறந்து அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். அவருடைய ஹாலில் ஏற்கெனவே நிறைய சின்னங்களும், யந்திரங்களும் பல வண்ண நிறங்களில் வரையப்பட்டு இருந்தன. எல்லாவற்றிற்கும் நடுநாயகமாய் மயான காளியின் பெரிய சிலை ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு பெரிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

 

மயான காளியின் முன்னால் பெரியதாக ஒரு மண்டலம் வரையப்பட்டிருந்தது. அந்த மண்டலத்தின்  நடுவில் குங்கும நீரில் தோய்க்கப்பட்ட ஒரு சிறிய கத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மண்டலத்தைச் சுற்றி சில சின்னச் சின்னங்களும், யந்திரங்களும் வரையபட்டிருந்தன.

 

பரசுராமன் மந்திரங்கள் ஜெபித்தபடி, இளைஞன் கொண்டு வந்த ப்ளாஸ்டிக் பையிலிருந்து மண்ணை ஒரு முக்கோணத்தில் சிறிது கொட்டினார். இன்னொரு முக்காணத்தில் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட கைக்குட்டையை வைத்தார். பரசுராமன் ஏற்கெனவே சேதுமாதவனிடம் இருந்து சைத்ராவின் சில புகைப்படங்கள் வாங்கி வந்திருந்தார். அவற்றிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து மயான காளியின் சிலை மீது சாய்த்து நிறுத்தினார். அந்தப் புகைப்படத்தில் சைத்ரா மஞ்சள் நிறப் புடவை அணிந்து புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.

 

எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து, திருப்தியடைந்த பரசுராமன் தன் விசேஷ பூஜையை ஆரம்பித்தார்.

 

சுகுமாரன் அன்று இரவு நண்பர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஓட்டலில்    அளித்த விருந்தில் கலந்து கொண்டு கிளம்பும் போது நேரமாகி விட்டது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பதினோரு மணி ஆகியிருந்தது. அந்த நேரத்தில் சென்னை நகர வீதிகளில் பயணிப்பது ஓரளவு சுலபம். போக்குவரத்து நெரிசல், ஊர்தல் இன்றி வேகமாய் போக முடிவது அவருக்கு மிகப் பிடிக்கும். பகல் நேரங்களில் எல்லாம், எத்தனை விலையுயர்ந்த காராய் இருந்தாலும், எத்தனை வேகமாய்ப் போக முடிந்ததாய் அது இருந்தாலும், ஒரு பயனும் இல்லை

 

திடீரென்று சுகுமாரன் வயிற்றுக்குள் ஏதோ எரிச்சலை உணர்ந்தார். சாப்பிட்டதில் ஏதோ ஒன்று மிகவும் காரமாய் இருந்திருக்க வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிட்டதில் அப்போது தெரியவில்லை போலிருக்கிறதுஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் காசைக் கணக்கில்லாமல் வாங்குகிறார்களே தவிர தரமான உணவைத் தருவதில்லை. பகட்டுக்குத் தான் பணம்

 

கார் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ வித்தியாசமான அமானுஷ்யமான ரீங்காரம் அவர் காதில் ஒலிக்க ஆரம்பித்தது. அவருடைய கார் அவர் வசிக்கும் தெருவுக்குள் திரும்பிய போதே  அவர் நாய் டாமி குரைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இன்று அவனை கூண்டிலிருந்து விடுவிக்கும் நேரம் கழிந்து விட்டதால் கோபத்தில் குரைக்கிறானோ?

 

அவர் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன் கூர்க்கா அவசரமாக கேட்டைத் திறந்தான். போர்ட்டிகோவில் காரை அவர் நிறுத்தி விட்டு இறங்கிய போது சைத்ரா தோட்டத்தில் நின்றிருந்தாள். மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்த அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

மிகத் தத்ரூபமாகத் தெரிந்த அந்தக் காட்சியில் சுகுமாரனின் இதயம் துடிக்க மறந்தது. பீதியில் கண்கள் விரிய அவர் சிலை போல் நின்றார்.


(தொடரும்)

என்.கணேசன்